Tuesday, March 11, 2014



அகதிக்  காகம்           
                               
நீண்டதோர் கடற்  பயணத்தின்
மூன்றாம் நாள் அதிகாலை
கண்ணில்ப் பட்டது முன்புறக் கொடிமர
உச்சியில் அமர்ந்திருந்த அக்காகம் ..
 
சில நூறு மைல்கள் கரையே இல்லாப்
பெருங் கடல் நடுவே எப்படி வந்ததோ,
கண்டம் கடக்கும் பறவைகள் பலவும்
ஓய்வெடுக்க வந்திருந்து மீண்டும் போகும்..
காகங்கள் பொதுவாக 
இத்தனை தூரம் பறப்பதே இல்லை..
இக்காகம் வழி தவறிப் பெருங் காற்றில்
அடித்துவரப் பட்டிருக்கலாம்.. 
 தொலை பயணக் கப்பல்கள்  ஓவ்வொன்றாய் 
அமர்ந்தமர்ந்து வந்திருக்கலாம்..
எம்பிப் பறக்க எத்தனித்து
பெருங் காற்றின் வேக வீச்சில்
தடுமாறித் தத்தளித்து மீண்டுமது
கப்பல் தளத்தினில் வந்தமரும்
 
தட்டில் அரிசிகடலைமாமிசத் துண்டுகள் 
கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டுவந்து
தளத்தில் வைத்து தள்ளி நின்றுப் பார்த்திருந்தேன்..
காகமே ஆனாலும் அது நம் நாட்டுக் காகமன்றோ? '
 
இன்னமும் இருக்கிறது நான்கு நாட்கள் 
தொடர் கடற்  பயணம்.. காற்றில்லா நேரத்தில் 
சிறிது தூரம் பறந்து விட்டு
வந்தமர்ந்து ஓய்வெடுக்கும்.. 

சென்னை - ஆஸ்திரேலியா
விசாவின்றி வந்தடைந்து 
கரைகண்டக் களிப்பினில்
வேகமாய் எம்பி சுய குரலில்க்
கத்திவிட்டு கரை நோக்கிப் 
பறந்ததுமறுநாள்.... 
உடலெங்கும் கொத்துக் காயங்களுடன் 
கப்பல்த் தளத்திலது ஓரமாய் ஒளிந்தபடி
அமர்ந்திருக்கக் கண்டேன் நான்..
தலை சாய்த்து எனை நோக்கி கத்தியது இப்படியோ ?
அயல் நாட்டில் அடிவாங்க வேண்டாமென்றும் 
வெளி நாட்டு மோகமது  கூடாதென்றும்....'
 
அது ஒரு மழை நாள்

அன்றொரு நாள்ப் பெய்த பெருமழையில் 
நனைந்து நின்ற உன்னை
என் குடைக்குள் அழைத்தேன்..
குடை வாங்கி வீசிவிட்டு 
என்னையும் மழை நனையச் 
சொன்னாய் நீ.. 
 
மூக்கு நுனியில் நீர் சொட்ட,
பூத்திருந்தப் பூ போல
பளீரிட்ட உன் முகத்தை என்னால் 
ஒவ்வொரு மழை போதும் யோசிக்க முடிகிறதாயினும் 
உன்னோடு நனைந்த அம்மழைக்குப் பிற்பாடு 
இன்றுவரை என் மனதுள்
எம்மழையும் பெய்யவில்லை...
 
எங்கோ ஓரிடத்தில் நீயும் மழை ரசிக்கும் போது
அன்று பெய்த அம்மழை
ஈரமாய் உன்னுள் சிலிர்த்துத் தெறிக்கலாம்...
பழைய நினைவின் மேகங்களை 
கலைத்து சொரிந்தபடி...  
 

இருள் கவியும் ஓர் இரவு

ஒளியோடும் கடக்கிறது
காலம் எனும்போதும்
இருள் கவியும் மனம் எப்போதும்
ஏனெதற்கென்ற கேள்விகளில்
பதிலின்றி நகரும் இரவு
வாழ்வில் சகலமும்
வென்றெடுத்தப் பிற்பாடும்
எதனையோ இழந்து நிற்கும்
எதனை எதனையென்ற
ஏக்கத் தேடலில்
எதுவுமற்று விரியும் இரவு.
 
 
இழப்பு
          
நீ என்றைக்கும் அமர்ந்து செல்லும் 
அப் பேருந்தின் இருக்கையில் 
வேறொருத்தி அமர்ந்திருந்தாள் அன்றைக்கு
உனக்காகக் காத்து நின்ற எனக்கது
பெருங் கவலைத் தந்தது..
 
நெற்றியில்த் தவழும் கூந்தலை 
வலக் கையால் விலக்கி விட்டுக் 
கடைக் கண்ணால் நீ சிந்தும் 
புன்னகைக்குப் பிற்பாடே 
அன்றைய என்பொழுது
விடிந்ததாக அர்த்தம் ..
கண்களால்ப் புன்னகைக்கும் 
பெரும் வித்தைக் கற்றிருந்தாய்  நீ ....
தொடர்ந்து நான் காத்திருந்து 
சிலவாரம் சென்றபின்பு கண்டேன் 
உன்னை வேறொரு பேருந்தில் 
மற்றொருவன் அருகிருக்க 
நெற்றி வகிடில்க் குங்குமமும் 
புது மஞ்சள்த் தாலிக் கயிறும் 
ஜரிகைப் பட்டின் பளபளப்புமாய்
நீ என்னை நேராகப் பார்த்தாய் 
உன் கண்களன்று புன்னகைக்கவே இல்லை...     
 
 
 
 
பெருங் கோட்டைச் சுவர் தாண்டி
உள்
 நுழையத் 
தேரோடும் தார் சாலையின்
இருமருங்கும்
 புது வீடுகள்..
முப்பது ஆண்டுகளுக்கு முன்பான
ஊர்
 நெஞ்சுள் விரிகிறது..

நிரம்பித் தழும்பும் பெருமாகுளம்
இக்கரைக்கும்
 அக்கரைக்கும் நீந்திப்
போகும்
 சிறுவர் கூட்டம்.. 
குளம் களிப்படைந்துப் போயிருந்த பொற்காலம்..
 
கரையோர அரசமரத் திண்டில் காற்று வாங்கிக்
களைப்பாறும்
 வேளிமலை விறகு வெட்டிகள்
ஓயாதப்
 பறவைகளின் குரல்
சவக்
 கோட்டை மேல்ப் பறக்கும்
பருந்துக்
 கூட்டம்..
மாலையில் நாற் தெருவும் குழந்தைகள்
இளைஞர்கள்
 விளையாட்டு…
திடீரென வரும் சண்டை.. 
சற்று நேரத்தில் சமாதானம்
பள்ளிக்கூட நடையில் இரவெல்லாம்
உலகலசும்
 விவாதங்கள்
அதிகாலை
 ராமசாமி கோவில் சுப்ரபாதம்
ஊர்
 வாழ்ந்துக் கொண்டிருந்தது…
இன்றும்
ஊரில்
 மக்கள் வாழ்கிறார்கள்
ஊர்
 இறந்து கிடக்கிறது….
 
 
08-01-2012 திண்ணை இணைய இதழ்
 

இன்றும்

குளக்கரையோர கள்ளிப்
புதர்களிடை பரந்துவரும்
முறுக்குச் சுடும் மணம்
நல்லபாம்பு இரைதேடப்
புறப்பட்டாயிற்று...
 
இரவில் இரைபிடிக்க
வெளிச்சம் வேண்டி கக்கி வைக்கும்
நாகமணியை 
ஒற்றைப் பனைமரத்து மூட்டோரம்...
நாகமணி திருடக் கையில்
சாணியுடன் பனைமர
உச்சியில் காத்திருப்பான் மல்லன்.
கக்கிய மணிமீது சாணமிட்டு
குற்றிருட்டை உருவாக்கி
களவாடிச் சென்றவுடன்
பனைமரத்து மூட்டுமீது
தலையடித்துச் செத்தொழியும்
நாகப்பாம்பு!
தாத்தா சொன்ன
பழங்கதைகளின்றும்
புதிதாய்த்தான் இருக்கிறது
அவன் தாத்தா சொல்கையில்
என் மகனுக்கு...
 
 
உதிரும் சிறகுகளின் இறகுகள் 
 
ஓடி வந்து புத்தகப்பை வீசி 
கிடைத்ததைத் தின்று 
தெருவிறங்கினால்  
வந்து சேரும் நண்பர்கள் 
துவங்குவார்கள் தீர்மானிக்கப் பட்டிருந்த 
அன்றைய ஆட்டத்தை 
 
விளக்கு வைக்கும் நேரத்தில் 
அம்மாவின் மூன்றாவது அழைப்பிற்குப் 
பிற்பாடு புழுதியில் உருண்டு 
வியர்த்து மூச்சு வாங்கி
கைகால்கள் கழுவி சாமி கும்பிட்டு  
அமருகையில் சென்னை வானொலியின் 
மாநிலச் செய்திகள் துவங்கும்..
 
செய்திகள் முடிந்ததும் படிப்பு 
இரவுணவு முடிக்கயிலே
சுருட்டி இழுக்கும் தூக்கம் 
தினம் காலை குளக் குளியல் 
மழைக் காலம் மழைக் குளியல் 
 
அறுவடைக் காலங்களில் தெருவெங்கும் 
கதிரடிப்பும்மாடுகளின் மணி ஒலியும் 
உலர்த்தும் வைக்கோல் மேல் உடலரிக்க 
சொறிந்தபடி விளையாட்டு
 
திருவிழாக் காலங்களில் தாரை தப்பட்டை 
தவில் நாதஸ்வர ஊர்வலங்கள் 
இரவின் தீவெட்டி எண்ணெய் மணம்
ஓங்கி முழங்கும் வில்லுப் பாட்டு..
இளம் பருவம் ஓடியது விரைவாக... 
 
இன்றென் மகனிடம் பள்ளி விட்டு வந்த பின்பு 
'வெளிச் சென்று விளையாடு',
எனச் சொன்னால் 
யாரோடு?" என்று வெறிச்சோடியத் 
தெருவைக் காட்டுகிறான்.  
 
நூடூல்ஸ் தின்றபடி மடிக் கணனியில் 
விளையாடிக்கொண்டே என்னிடம் 
"இதுவும் விளையாட்டு தானப்பாஎன்கிறான். 
 
கள்ள உறவும்கதறல்களுமாய்
பதினொன்று மணி தாண்டியும் 
தொடர்கிறது சீரியல்கள். 
 
நம்மையறியாமல் தலைமுறைகளாய் 
நாம் பறந்து வந்த
சுவாரஸ்ய சிறகுகளின் இறகுகள்
உதிர்ந்து கொண்டே இருக்கிறது 
இயந்திர சிறகுகளை ரகசியமாய் ஒட்டியபடி...  
 
 
உளத் தீ ..
 
சிறிதொரு தீப்பொறி மனதுள் வைத்து 
சொற்களால் ஊதிப்
பெருந் தழலாக்கினாய்   நீ
உன் சொற்களின் சூடும்
வார்த்தைகளின் வெம்மையும்   
பொசுக்கிப்  போட்டதென் 
மனதைப் பலமுறை
ஆறாமல் போன  ரணங்களில் 
தவித்ததென் மனம்
காரணம் புரியாமல்  
குடிக்குள் புகுந்தென்னை 
சுருக்க முயன்றேன் 
அதுவே காரணமாய் ஊர் முன்   
நிலை நாட்டினாய் உன்னை..   
எல்லோர்  நிலைபாடும் என்னைக்
குறையூற்றி சிறுகச் சிறுகவாய்க் 
கொன்றொழித்துக் கொண்டிருக்க 
உனக்கு மட்டுமேத்தெரியும்
எனக்குள் நீ வைத்தத் தீயே 
என்னை எரித்துக் கொண்டிருப்பதும்
இப்பொழுதெல்லாம் 
தீயையே நான் ரசித்துக்
கொண்டிருப்பதும்..  
 
‎15-15-01-12 திண்ணை இணைய இதழ்
 
எதை வாங்க?

மூன்று நாட்களாய் 
வீட்டு டாய்லெட் குழாயைத் 
திருகினால்
தண்ணீர்
குழாயின் வாய்வழி வராமல்
திருகிவழி கொப்பளிக்கிறது
வாஷர் மாற்ற வேண்டும்
ஐந்தோபத்தோ செலவாகும்
கையிருப்போ பத்தே ரூபாய்
அதில் நான்...
எழுத பேப்பர் வாங்குவேனா?
வாஷர் வாங்குவேனா?
 
 
என் வீடு

மாமரத்துக் கூட்டிலிருந்து
தினந்தோறும் முதல் கூவி
அத்தனை பறவைகளுக்கும்
விடியலை தெரிவிக்கும்
இரட்டை வால்குருவி
ஒன்றிரண்டாய் ஆரம்பித்து
காற்றெங்கும் வியாபித்து
படர்ந்து பரவும் பல குருவிகளின்
சங்க்கீத பேரோசை
இளம் தூக்கத்தில்
நாதத்தின் மயக்கம்போல்
தாளம் தப்பாமல்
சுருதி பிசகாமல்
விடியலின் இளவெயில் வரை
ஓயாது ஒலிக்கும் அவைகளின் சங்கீத சப்தங்கள்
இளவெயிலில் தளிர்மரத்தின்
இலைநுனியில் பட்டொளிரும்
கதிரவனின் கண் சிமிட்டல்.
வீடுகளில் பாதி விழித்து
வாசல் தெளிக்கும் சத்தம்
தலையணை அணைத்தபடி
தூக்கத்தில் சுகம் சேர்க்கும்.
படர்ந்து நிற்கும் மாமரத்தில்
அணில்களின் இரைதேடல்
ஓய்வுக்குப்பின்
காகங்களின் படையெடுப்பு
ராத்தூக்கம் கலைந்து
முன்னங்கால்களால் முகம் துடைத்து
நாவால் உடல் சுத்தி செய்து
சோம்பல் முறித்துத் தயாராகும்
பூனைக்குட்டி
 
காலையில் கிடைக்கும் தேனீர்
வேண்டி செல்லமாய் குரைக்கும்
வளமாய் வளர்த் நாய்
 
தெருவெங்கும் காளைகளின்
கழுத்துமணி கிணுகிணுப்பு
செய்தித் தாள்கள் விசிறியெறியும்
ஓசையுடன் பால்கார மணியோசை
தூக்கம் விட்டாலும்
தூங்கச் சொல்லும் இதமான
குளிர்கோயில்களில் கசியும்
சுப்ரபாத இன்னிசை
மழைநீரால் கழுவியதாய்
கதிரொளியில் மிளிரும் வேளிமலை
 
 
தூக்கத்தை துக்கத்துடன்
கலைத்துவிட்டு எழுந்து 
காலை கடன்கள் முடித்தமர்ந்தால்
மாலையில் பறவைகள்
கூடடையும் முன் கடைசியாய்
கூவி நிறுத்தும் இரட்டைவால்
குருவியின் சப்தம்வரை
இன்னமும் ரசிக்க ஏராளம்
எனக்குண்டு என் வீட்டில்.
 
 
என்று தொலைப்பேன் இப்புகை?
                                                            
எதற்கும் அஞ்சமாட்டேன் 
என்றிருந்த  என் மார்க்கூடு
ஏனென்று தெரியாமல் திணரடித்துச்
சுருட்டிக் கொள்கிறது சுவாச கோசங்களை...
விட்டேத்தியாய் வாழ்ந்த காலத்தில் 
ஏதுமற்று நிலை தெரியாதுதிர்த்துத்
தள்ளிய நாட்களின்
கொடுந்துயர் வடிகிறது 
வாய்வழியாய்ப்  புகைமூலம்..
விட்டொழிக்க வேண்டுமென்ற 
பெருங்கனவின் சிந்தனையில்
உயிர்க் கொள்கிறது... 
மீண்டும் ஒரு சிகரெட்...
 
 
என்றேனும்

என் மீது பிரியம் கொண்டவர்களின்
நம்பிக்கை அனைத்தும் புறந்தள்ளி
எங்களுக்கிடையே சுவரை
எழுப்பி
முறண் முற்றிக்
காலம் கடத்தி
வாழும் வாழ்க்கை
சலிப்படைய வைக்கிறதென்றாலும்
மனதுள் ஒரு நிம்மதி
என்றேனும் ஒருநாள்
அவர்களை விட்டென் மரணம்
நிகழும்
அன்றேனும் புரிபடும்
நான் அவனில்லை என்பது

 
 
 என்னுலகம்     
 
 பன்னீர்க் குடத்துள் மிதக்கும்
சிசுவின் ஏகாந்த நிலைபோல 
என் மனதுள் விரிந்து சுருங்கிச்
சுழலும் சலனங்கள்..
சலனங்கள் சங்கமித்து உருக்கொண்டு
வெளிவரும் என் வார்த்தைகள்
புரியவில்லையென்று
சொல்லித் திரியும் நீ
பலமுறை கேட்டிருக்கிறாய்
நான் எங்கிருக்கிறேன் என்றோ,
எவ்வுலகில் இருக்கிறேனென்றோ..
உன் கேள்விக்கு பதிலற்று நான்
நோக்கும் பார்வை
உனை நோக்கியே இருப்பினும்
பார்வைக்குள் விழுவது நீயல்ல...
உனை ஊடுருவி வெளியேறி
அது பயணித்துக் கொண்டிருக்கும்
பெருந் தொலைவு
நீ நினைத்துக் கொள்வாய்
வார்த்தைகள் இல்லையெனினும்
பார்வையாவது கிடைக்கிறதென்று!
 
 
ஒரு கடலோடியின் வாழ்வு
                                                     

திரண்டத் திட்டாய் கரு நீல மேகங்கள் 
உதிப்பின் ஒளியில் மேல் வானச்  சிவப்பு 
வெண் கை நீட்டி மற்றொரு  மேகம்... 
கடல்விட்டெம்பும் சீகல் பறவைகள் ...
அடர் நீல அசைவில்
பெரும் பட்டாய்க் கடல் ...
எத்தனை பேருக்குக் 
கிடைக்கும் இவ்வாய்ப்பு
கர்விக்கும் மனம்...  
மறுநொடி சென்றமரும் 
மனைவிகுழந்தைகள் பக்கத்தில் ....
கண்கள் இங்கும் மனமங்குமாய்  
விடுமுறை தினத்தை கணக்கெடுக்கும்
நாளை மீண்டுமோர் விடியல்..  
 
18-09-2011 .. திண்ணை இணைய இதழ்.
 
ஓர் இறக்கை காகம் 
 
முட்டை விரிந்து வெளிவரும் போதே 
ஒற்றை இறக்கை இல்லாமல் இருந்தது 
அக்காகக்  குஞ்சுக்கு
சக முட்டைகள்  விரிந்து 
அத்தனைக் குஞ்சுகளும் இரட்டை சிறகடிக்க 
இக்குஞ்சு மட்டும் ஒற்றை சிறகடித்து 
எதுவும் புரியாமல் மறுபக்கம் பார்த்தது
சிறகு இருக்கும் இடத்தில்
வெறுமொரு சிறு முளை மட்டுமே அதற்கு   
பறக்கத் துவங்கிய குஞ்சுகள் கண்டு  
ஒற்றை சிறகினை ஓங்கி வீசி எம்பிப் பார்த்தது
முடியாது போக 
கூட்டுக்குள்ளே முடங்கிப் போனது
தாய்க் காகம் அதற்கு கொண்டு கொடுத்தது 

சக காகங்கள் சொல்லும் ஊர் கதைகள்
கேட்டு ஆசை ஊற்றெடுக்க  
ஒருநாள் 
கூட்டிலிருந்தது தாவிக் குதித்து தரைக்கு வந்தது
மிகத் துரித நடையது தானாய் பழகி 
அடிமரப் பொந்தொன்றில் தனக்கானக் 
கூட்டை தானே அமைத்தது 

காலை முதல் மாலை வரை 
நடந்து நடந்தே இரை தேடித் திரிய 
ஊர்மக்கள் கவனம் அதன்மேல் திரும்பி 
ஒவ்வொரு வீடும் 
அன்பாய் அதற்கு உணவுகள் கொடுக்க
பறக்கும் காகங்கள் பொறாமையில் எரிந்தன!
நடந்தே திரியும் காகத்தை ஒழிக்க  
திட்டங்கள் தீட்ட கூட்டங்கள் போட்டன
அவற்றால் ஒன்றும் செய்ய முடியாமல்ப் போக 
எதனையும் பொருட்படுத்தாது 
நடந்து நடந்தே வாழ்ந்து முடித்து 
போய்ச் சேர்ந்தது 
ஓர் இறக்கைக் காகம் 
 
பறக்கும் காகங்கள் சாதாரணமாய்ப் போக 
நடக்கும் காகத்தை ஊர் தேடி அலைந்தது 
அது மரணித்த பின்பும் 
பரம்பரை பரம்பரையாய் 
கதை வழி இன்னும் வாழ்கிறது மனதுள்.
25-09-2011 திண்ணை இணைய இதழ்


(செப்டம்பர் 2002 கணையாழி இதழில் வெளிவந்த கவிதைகள்)
 
கணிப்பு
வயோதிகக் கூன் நாளாக
நாளாக வளைந்து
தோல் சுருங்கி எஞ்சிய ரத்தம்
சோர்ந்தோடும்
நரம்புகள் புடைத்து
மரண பயம்
மனதின் அடியாழப்
பரப்பினையுடைத்து
தாத்தாவை படுத்த
படுக்கையாக்கியது.
 
ஊர் சொல்லும்,
 "சொற்கள் பலிக்கும்"
கணியன் வந்தென் தாத்தாவின்
கைரேகை பார்த்து,
'இன்றைக்கு ஆறாம் நாள்
நிச்சய மரணம்'
என்றவன் அடித்துச் சொல்ல...
மரணத்தின் கோரநொடி நோக்கி
ஆறாம்நாள் காலையில் நாங்கள்
 
அம்மா சொன்னாள்
முகத்தில் என்ன திவ்யப் பிரகாசம்!
அணையப் போகும் விளக்கின்
வெளிச்சமென்றாள் அத்தை
 
எழுந்தமர்ந்தார், புன்னகைத்தார்
எல்லோரையும்
அடையாளங்கண்டு
விசாரித்தார்
 
கடுங்காப்பி
ஆசையாசையாய் குடித்தார்
மெல்ல இறங்கி நடக்கவும்
முற்பட்டார்தெளிவாய்ப்
பேசினார்
 
நண்பன் வந்துதான் சொன்னான்
கணியனின் மரணம்
நொடியில் முடிந்ததாம்.
 
 
உணர்வு
 
பூவுக்கும்இலைக்கும்
மிஞ்சிப் போனால் மரமென்று
யாரோ சொல்லிய ஒன்றிற்கும்
ஓயாது தாவிக்கொண்டுதான்
இருக்குமோ மனம்?
புதிய மலரென பிறர்சொல்
கேட்டு இறக்கை விரித்து
பறந்து விழுந்து கருகிய பிறகே
இறக்கைகளே இரவல் என்பது
புரிகிறது.
 
ஊர்ந்துதான் செல்கிறேன்
நிஜமானவையைத் தேடி
இப்போது
ஆனாலும்
நானாக நான் ஊர்வதில்
யாராகவோ பறந்ததைவிட சுகம்...
சுகம்...

வலிய வீடு...
பள்ளிப் பருவத்தில்
தோழர்கள் வியந்த
என்வீட்டு விஸ்தாரம்
எனக்கன்று புரியவில்லை.
 
ஓரத்து அறையில் பெரிய
காதுகளும் சுற்றி வலையுமாய்
பீதிதரும் என்னுயர
சீனத்துப் பரணி...
 
தோண்டத் தோண்ட ஊறுகாய்
வருமென்று பாட்டி சொன்னதாய்
அம்மா சொல்வாள்... ஆனால்
எனக்குத் தெரிந்ததெல்லாம்
அதனுள்
அந்துப் பூச்சியின்
அவிந்த நாற்றம் தான்...
 
தேக்குமரச் சட்டத்துள்
பட்டுச் சட்டையில் ஜமீன்தாராய்
வாழ்ந்த என் முப்பாட்டன்
புகைப்படம் செதிலரித்த
நிலையில்.
 
சித்திரப் பூட்டுகள் திறந்து
நெஞ்சிடிக்கும் ஓசையுடன்
கதவினைத் தள்ளினால்
பெரும்பாலும் அறைகளில்
உடலுக்குப் பொருந்தாத
நீளச் சிறகுகளை என்
கன்னம் உரச அசைத்தபடி
நரிச்சில்கள்...
 
தகரத்தில் தாளமிட்டோடும்
மரநாய்களின் ஓசை
என் இரவுத் தூக்கத்தின்
இன்ப இசையானதை தவிர்க்க
முடியவில்லை.
 
புற்றுவைத்த மாமரத்து
வேரடிவிட்டு... வராந்தா ஓரத்தில்
கட்டெறும்புகள் குடிமாறிற்று.
 
பத்துகோட்டை நெல்சுமந்த
பிரம்மாண்டப் பத்தாயம்
பெருச்சாளிகளின் இனப்பெருக்க
இன்பத்தின்
ரகசிய தாவளமானது.
 
பச்சிலை சித்திரமிருந்த
சுவரெங்கே?
மழைக்குத் தெரியுமா
பச்சிலையும்சித்திரமும்?
 
இங்கிங்கு இது இது இருந்ததாக
இறப்பிற்கு மூன்று நாட்கள்
முன்பாக
ஆசையாய் தாத்தா சொல்லிப்
போனது நினைவில்...
எங்கே அவையென்று
அவரையும் கேட்கவில்லை...
 
இன்றெனக்கும் வியப்புதான்
எப்படிப் பராமரித்தார்
இவ்வீட்டை
என் தாத்தாவின் தாத்தா?
தாத்தாவின் அப்பா?
 
தரம்

இவ்வாட்டம்
ஓயட்டுமென
விலகின
சலங்கைகள் தாமாகவே
சுற்றிச் சுழன்று மொத்தமும்
தமதெனக் கொண்டு
தரையில்
பேரிகை முழக்கம் போல்
சப்தித்து
வெற்றுப் பாதங்கள் சோர்வற்று
காற்றை உந்தி உதைத்தாடின
மெல்லக் களைத்து
வேகமும்உந்தலும் ஓயும் நேரம்
ஓர நாற்காலியில் வீற்றிருந்தன சலங்கைகள்
சப்தம் மட்டும்
என்றென்றும் சலங்கைகளுக்குத் தான்.
 
 
வேறென்ன வேண்டும்?

திருப்பிப்படி பலமுறை
அப்படியும் புரியாது... எழுதிய
என்னைக் கேள்
எனக்கும்
தெரியாதாயினும்
புரியாத நீயொரு முட்டாள்.
 
மூடிவைமாமாங்கம் கழியட்டும்
அர்த்தம் காட்டாது அழியாமல்
நிற்குமென் இறவாக் கவிதை
 
என் கவிதையைப் புரிய
என் குழு எனக்குண்டு
வேறென்ன வேண்டும்?


அவனும் நானும்

புகையிழுத்து இருமி
கண்ணீர் கட்டியும்
சாதித்தப் புன்னகை அவன் முகத்தில்
 
எப்படி விழுங்க இத்தனை கசப்பை?
ஒரே மடக்கில் "ரம்குடித்து
உழறினான்.
 
தெருக் குழந்தைகள்
சைக்கிள் "ரிம்"மை
உடல் கூசும் ஓசையுடன்
ஓட்டிச் செல்வது போல்தான்
கடந்திருக்கக் கூடும் காலம்
 
பஸ் நிலைய டீக்கடையில்
அவன் மாஸ்டர்
கோட்டு சூட்டோடு
வந்திறங்கிய என்னை
பல்லிடையில் ஈரமாய்ப் புகையும்
பீடியோடு கேட்டான்
"டீஸ்ட்ராங்காலைட்டா?
 
மீண்டும்

அவருடலைப் புதைத்தனர்
மன மகிழ்ச்சியாய்
முகம் மட்டும் சோகமாய்
உயில் பிரித்துப் படித்த
சில நிமிடத்தில் 'மூத்தவன்'
விட்டான் ஒன்றினை சின்னவனுக்கு
"நானா கேட்டேன்அப்பாவேக்
கொடுத்தார்"
விளாசும் ஓசைகள்
காற்றோடு கலந்தன
மீண்டும் ஒரு குழி அவர் பக்கம்
மூத்தவன் பிணம்
இளையவன் புதைத்தான்
இவன் குழி என்றைக்கோ?
யாராலோ?
 
இக்கரைக்கு...

சுற்றிச் சுழன்றடிக்கும்
சூறாவளி
மனதுள் உருவெடுக்கும்
கண்ணெட்டுத் தொலைவு வரை
நீல வான்கடல்...
 
கடல்மணம் சுவாசத்துள் நுழைந்தென்
 உயிர் கலக்கும்
உதிர நிறம் நீலமாய் மாறினால்
கடலின் மைந்தனாவேன்.
 
எடுத்து வைக்க சாத்தியப்பட்டக்
காலளவு இனியும் நீண்டகலாதா?
உலகின் நெருக்கடி வீதிகளில்
உலா வந்தும்
கிராமிய சுவைக்காய் அலைபாயும்
மனம்.
 
பச்சையில் இருந்து நீலமாய் மாறி
கடலோட வந்தும்
கரை சேரத் தவிக்கும்.
 
 
அவற்றின் சுதந்திரம்

பறவைகள் கூடடையும் மாலை
அமர்ந்திருந்த மரத்தடியில்
என் தலையும் உடலும்
கழிவறையாயிற்று
துயில் கொள்ளும் துரிதத்தில்
எச்ச நாற்றத்திலும்
மீறித்தான் நிற்கிறது
அவற்றின் சுதந்திரம்...
 

காத்திருப்பு 
குற்றங்களுக்கெதிராக உயர்த்தப்படும் சாட்டைகள்
விளாசப் படாமலேயே மெதுவாய்த் தொய்கின்றன
இடக்கையால் பெருந்தொகை வாங்கிக்கொண்டு
சட்டங்கள்
 தன்னிருப்பை சுருக்கவும்
விரிக்கவும் கரன்சிப் பகிர்வுகள் 
தலையசைத்து நடக்கிறது
நியாயங்களின் பாதைகளில் முள்வேலிப் போட்டு
அராஜகப் பெருஞ்சாலை விரிகிறது                                
ஏதோ நினைவுகளில் அழுத்தப் படுகிறது
வாக்குப் பதிவு இயந்திரத்தின் பொத்தான்கள்
உள்ளேப் போவதும்வெளியே வருவதுமாய்
நகர்கிறது ஐந்தாண்டு 
காட்டப்படும் சொத்துக் கணக்குகள்
யாருக்குமே
கூடவோக் குறையவோ இல்லை
உட்பூசல்களும்வெளிப்பூசல்களுமாய்
உதிர்ந்து கொண்டிருகிறது நாட்கள்  
பொது மக்கள் சகலரும்
ஒண்டிக் குடித்தனத்தில் ஒளிந்து கொள்கிறார்கள்
இலவசமாய் பலதும் கிடைத்தும்
விலயேற்ற வீரியம்
கொடுங் கைகள் கொண்டுத் தாக்கித் தகர்க்கிறது
மீண்டுமொரு மௌன ஐந்தாண்டுத் தவத்தில்
காத்துக் கிடக்கிறார்கள்  எப்பொழுதும் போலவே 
(02-10-2011 திண்ணை இணைய இதழ்)
 
கோமறத்தாடியின் மறுநாட்க் கவலை
                                                                         
ஓங்கி ஒலிக்கும் ஒற்றை முரசின் 
தாளத்தில்த் துள்ளும் கோமறத்தாடியின்
கையில் இருந்த கமுகம் பூ உதிர்ந்து தெறிக்க 
ஆக்ரோஷ ஆட்டத்தில்
பலமாய் வெளிவரும்
அவர் குரலற்ற வேறொன்று!
வியர்த்து விறுவிறுக்க
ஆடும் மாடனுக்கு  சாராயம் கலந்த
இளநீர்கள் கொடுத்து 
உக்கிர ஆட்டத்தை
உச்சத்தில் கொண்டு போய்
அதிரும் முரசினை சட்டென்று  நிறுத்தி
உருவாகும் அமைதியில்
கோமறத்தாடியின் உருவில் மாடனின் குரல் மட்டும்
சத்தமாய் ஒலிக்கும்...
நீட்டப்படும்  அவித்த முட்டைகள் தின்று,
மீண்டும் சற்றே சாராயம் குடித்து
திருநீறு பூசி குறிசொல்லி முடித்து
சட்டென்று
 தரையில் 
மாடன் விலகி மனிதனாய் சரிய
தண்ணீர்த் தெளித்து புதுத் துணி உடுத்தி 
கறிச்சோறு
   தின்னும் பொழுதில் நினைப்பார் 'என்றைக்கும் திருவிழா இருந்தால் என்ன சுகம்
 
நாளை முதல் சாப்பாடு ஒருவேளை ...
இன்று
 காலில் விழுந்தெழும் பக்தர்கள் 
நாளை
 சொல்வார்கள் ,
ஏதாவது சோலி மையிருக்குப் போவும் ஓய்..."
 
(02-10-2011 திண்ணை இணைய இதழ்)
 
சிங்கம் குகைக்குள் படுத்திருக்கிறது
 
வேட்டையாடும் விதத்தில் 
நவீனம் காட்டித் துரத்தி 
விரட்டி வேட்டையாடி 
இரையைப் பகிர்ந்தளித்து 
மகிழ்ந்திருந்த சிங்கமது தனது தளங்களையும்,
களங்களையும் விரிவாக்கி வீற்றிருக்க 
முறையற்ற முறைகளில்
முயல்கள் கூட
வேட்டையாடக் களமிறங்க 
சிந்தனையில் ஆழ்ந்தது சிங்கம்.
 
ஒரு சுப்ரபாதத்தில் 
தன் நிலை சொல்லி குகைக்குள் படுத்தது
'இனி நான் வேட்டையாட மாட்டேனென்று'
மனதுள் சபதித்து 
வேடிக்கை பார்த்தபடி குகைக்குள்ளே கிடக்கிறது.
 
காட்டு விலங்கெல்லாம் 
சிங்கமாக முடியவில்லை
கூடிக் கூடியவை பேசும் போது
சொல்லிக் கொள்கின்றன தங்களுக்குள்
‘வேட்டையே ஆடவில்லையானாலும்
சிங்கத்தின் வேட்டைமுறை ஒன்றுக்கும் அமையவில்லை
குகைக்குள்ளே இருந்தாலும் 
அதன் கம்பீரம் போகவில்லை.
 
 
சிதைத்தொழித்தல் 
என் பால்ய காலத்தில்
பார்த்திருந்த
 என் மாவட்டம்
ஐம்பெரும்
 நிலங்களில் 
நான்கினைக் கொண்டது
முப்பது ஆண்டுக்குள் இயற்கையின்
பேரழகை
 மொத்தமாய் சிதைத்தொழிக்க
எப்படி முடிந்ததென்று யோசித்து நின்றிருந்தேன்
மேகங்கள் வருடும் பெருங் குன்றுகள் பலவும் 
'குவாரி'களாய்க் கல்லுடைத்துத் தரைமட்டமாகி
நீர் தேங்கி பெரும் பள்ளமாகியது
விரிவயல் வெளிகளின் பெரும் பகுதி
வீடுகள்,
 கல்யாண மண்டபங்கள்,
பெட்ரோல் நிலையமென்று 
புது முகம் கொண்டாயிற்று
பரந்து விரிந்திருந்த ஏரிகள்
சுருங்கி
 குளங்குட்டையாகியது
மலையடிவாரங்கள் ஒவ்வொன்றிலும்
அரசியல்வாதிகளின் தொழில்நுட்பக் கல்லூரிகள்
தேக்கு, ஈட்டி, பலா, அயனி மரங்களெங்கே?  
வேளி மலை அழகிழந்து 
ரப்பர்ப் பால் வடிக்கிறது 
செம்மறியாட்டுக் கிடையும்
வாத்துகள் மேயும் வயலும்
எங்கெங்குத்
 தேடியும் காணவில்லை 
சிட்டு, தூக்கணாங் குருவிகள், அடைக்கலங் குருவிகள்
குடி பெயர்ந்து சென்றனவா? 
தற்கொலைச் செய்தனவா?
விரிந்து சென்ற ஆறுகள் 
சூம்பிப் போய் ஓடையாய் மாறிற்று 
ஆல்,
 அரசு, புளி மரத்தில் 
கருங் சிறு மடிக் குடைகள் கட்டித் தூக்கியதுபோல்
தொங்கிக் கிடக்கும் வவ்வால்கள்
ஒன்றையும் காணவில்லை
ஏரிக் குளங்களெல்லாம்
பன்னீர்
 போல் நிறைந்திருந்த தண்ணீரில் 
மீன் வளர்ப்புத் துவங்கியதால்
இரவுகளில்க் கொட்டப்படும் சாணியும், 
கறிக் கடைக் கழிவுகளும் தண்ணீரை மொத்தமாய்
சாக்கடைப்
 போலாக்கியது
குளித்தெழுந்தால் 
அரிப்பு வந்து சொறிகிறது
அனைத்தையும் வெறியோடு அழித்தெறிந்து
முன்னேகிச்
 சென்றொருநாள்
சகலமும் தூர்ந்த பின் 
சிலர் யோசிக்கக் கூடும்
பூமியின் இயற்கை முலைகளை
வெட்டிவிட்டு
 சிலிக்கான் முலைகளை
ஒட்ட வைத்தப்  பெருந் தவற்றை
 
02-10-2011 திண்ணை இணைய இதழ் 
 
சிலந்திகள்
 
பின்னிக்கொண்டிருந்த
வலையழகும் அவ்வலைகளில்
சிக்கித் திணறுறும்
கொசுக்களை அவைகள்
நடனமாடி கொன்று
தின்பதையும் ரசித்திருந்தேன் பலநாட்கள்
 
பிறிதொருநாள் பார்த்தபோது
என்னோலைக் கூடாரத்தில்
கொசுக்களே இல்லாதாயினும்
எங்கெங்கு நோக்கினும்
பெரு வலைகளும்
அசைந்தாடும் சிலந்திகளும்.
  
                          02-10-2011 திண்ணை இணைய இதழ் 
 
சிலை

அக் கிராமத்தின் சிற்றோடைக்
கரையோரம் கால் முட்டிப் பாகம்வரை
செஞ்சேற்றினுள் அமிழ்ந்து
தேகமெங்கும்
சகதித் தீற்றுடன்
 மல்லாக்கக் கிடந்தது அச்சிலை

கண்களிலும் உதட்டிலும் 
புன்னகைப் பூவிரிக்க 
கச்சை கட்டிய கூர் முலையும்
வடிவேயான இடையுடனும் 
யாரையோ எதிர் நோக்கும் பாவனையில் 
இடக்கை  நாடி தாங்க 
வலக்கை இடையில் வைத்து காத்திருக்கும் அச்சிலையின் 
கை விரல்கள் சிலவற்றை காணவில்லை
காலச் சுழற்சியில் 
உடைந்தவை உதிர்ந்திருக்கலாம்

அற்புதமான அச்சிலை 
எக்காலம் செய்ததென்றோ
எப்படியங்கு வந்ததென்றோ 
யாருக்கும் தெரியவில்லை
 
வயதான ஒருவர் சொன்னார் 
தன் சிறு பிராயத்தில்
கரையோரம் நின்றிருந்து
காலப் போக்கிலது  
நிற்க முடியாமல்ப் படுத்ததென்று
யாரோ துப்பிய வெற்றிலை எச்சில் 
உறை ரத்தம் போல்  தலைக் கிரீடத்தில்

சிதைந்துக்
 கொண்டிருப்பது    
வெறுமொரு கற்சிலயல்ல
சிந்தையுள் காதலுடன் 
யாரையோ நினைவிலேற்றி 
மனமுழுக்க வடிவமைத்து 
விரல்கள் வழி மனமிறக்கி 
உளிகளில் உயிர் கொடுத்து 
பலநாட்கள் பாடுபட்டுச்
செய்தெடுத்த 
பெருஞ் சிற்பியின் காதலும்,
திறனும் தான்.

திண்ணை இணைய இதழில் 09-10-11
 
 
தஞ்சை பெரியகோயில்        

சிந்தையுள் சிவனேற... சிவ போதை தலைக்கேற
யோசித்தான் அம்மன்னன் 
என்னதான் செய்வதென்று?
மனதுள் உருவெடுத்து மலர்ந்ததோர் பெருலிங்கம்
இதுவரை கண்டிராத, எவருக்கும் தோன்றிராத
மாலிங்க வடிவமது.. 
விக்கித்துப் போன மன்னன்
திசையெங்கும் பறையறைந்தான்...

சோழ சாம்ராஜ்ய விரிவைப்போல்
பிரமாண்ட கோயிலொன்றை 
விரைவாகப் பணிய வேண்டும்.. 
போரெடுத்து
வென்று வந்த பெரும் செல்வம் அத்தனையும்
மக்களுக்குப் போக
மீதி மகேசனின் பணிக்கேயென்றான்...

மனதுள் உதித்தெழுந்த மாலிங்க வடிவமதும்
பெரும் பரப்பில் உயர்ந்து நின்ற வான் முட்டும்
விமானமும் தினந்தோறும் கனவு கண்டான்
கனவதனை நனவாக்க பலவாறு சிந்தித்தான்..

கல்லெடுக்க மலையொன்றை தானேப்போய்
கண்டுவந்து சிற்பிகள் உதவியோடு தரமான
கல்லென்று தரம் பிரித்து ஆராய்ந்து
தொலை தூரம் கொண்டுவர
தடம் போட்டு பாதை செய்து
பெருங்கற்கள் பலகொண்டு தஞ்சையில்
குவித்து வைத்தான்.. இதுவரையில்
எவரும் செய்யவே நினைக்காத
பெருலிங்கம் செய்தெடுத்தான்....
லிங்கத்தை அமர்த்தியபின்
விமானம் உயரவைத்து
பல சிற்பம் அதிலமைத்து அற்புதம்
படைத்திட்டான்.. 
சிற்பிகள் மட்டுமன்றி
அரசனும் உழைத்திட்டான்..

கோவிலின் பிரம்மாண்டம்
சகலரும் பிரம்மிக்க.. நன்கொடைகள்
தாராளம் வந்தங்கு சங்கமித்து 
மேன்மேலும் மெருகேறி விமானம் விரிந்தெழ...
பெருந்தச்சன் விரலசைக்க 
உளிகள் உறவாட
சிற்பங்கள் உயிரோட.. 
பெருவுடையார் கோயிலது
பேரழகு கொண்டு நிற்க 
மன்னன் ராஜராஜன்
வெளி நின்று உள்நோக்கி தன்னுள்ளே யோசித்தான்
'இது நானா கட்டியது?பெருந்தச்சனா கட்டியது?
இல்லையில்லை.. 
எம் பெருவுடையார்
தனக்குத் தானே கட்டியது
அவனில்லாது போயிருப்பின்
எவனிதனை செய்ய ஒக்கும்?'
பெருவுடையார் ஆசிக்காய்
நெடுங்கிடையாய் விழுந்தெழுந்தான்...
ராஜராஜேஸ்வரம் வாழும் பெருவுடையார்
திருக்கோயிலென்று திரு நாமம் சூட்டி
தன் பெயரை மட்டுமன்றி
நன்கொடைகள் தந்தவரும்,
கோயிலுக்காய் உழைத்தவரும்,
சிற்பிகள் மொத்த பெயரும்
கல்லில் செதுக்கி வைத்து.. அன்று முதல்
அம்மன்னன் மாமன்னன் பெயரெடுத்து
இன்று வரை அங்கேயே வாழ்ந்துவரும்
அருள் மொழி வர்மனான
உடையார் ஸ்ரீ ராஜராஜத் தேவர் வாழ்க வாழ்கவே...

தலைமுறைகள்

மருதநாயகம் பிள்ளை
சிவன் பிள்ளையைப் பெற்றார்
சிவன் பிள்ளை
மருதநாயகம் பிள்ளையைப் பெற்றார்
மருதநாயகம் பிள்ளை
ஷிவக்குமாரைப் பெற்றார்
ஷிவக்குமார்
யாஷிக் ராகேஷைப் பெற்றார்
யாஷிக் ராகேஷ்
இம்மானுவேல் மேத்யூவைப் பெற்றார்
இம்மானுவேல் மேத்யூ
முஜீப் ரஹ்மானை பெற்றார்
முஜீப் யாரைப் பெறுவானோ?
மருதநாயகம் பிள்ளையும்
சிவன் பிள்ளையும்
எங்கே போனாரோ?
 
 
தூக்காமல் போன துக்கி
 
சிறுவயதில் கதை சொல்லித்
தருமென் தாத்தா ஒவ்வொரு
கதை முடிவிலும் பேரா
என் சாவுக்கு நீங்கள் நால்வரும்
பிணம் சுமக்க வேண்டுமென்று
என்னையும் சேர்த்து
பேரப்பிள்ளைகள்
நால்வரைக் கூறுவார்.
 
கப்பல் பணிக்கான
கடைசித் தேர்வினன்று
எங்களை விட்டுப் பிரிந்திருந்தார்...
தந்தி கிடைத்துப் போனபோது
என்பக்க சுமை ஏற்று யாரோ ஒருவன்
கொண்டு சென்றிருந்தான்
இன்றளவும் சுமையுடன் நான்.


தேடல்                                  
         
பிஞ்சு மழலையைக் கொஞ்ச எடுக்கையில் 
தானாய் வழிகிறது கனிவுமனம் வழி ஊறி
தூக்கும் கை வழி பரவி வியாபிக்கும் அன்பு
கண்கள் பார்க்கையில் நெஞ்சம் நிறைந்து
கசிந்துருகும் காதல் 
என்  காய்த்த கைதனில்
பூத்த மலரென படுத்திருக்கும் குழந்தை
சின்னச் சிணுங்கலில் என் மனச் சிறகுகள்
வானோக்கி எம்ப எத்தனிக்கும் 
விட்டுப் பிரிந்திருந்தும் மனதுள் 
அவள் மேல் வீசும் சோழ தேசத்து
பால் நிறை நெற்பயிர் வயல்வெளி  மணம்
மழை  பெய்து பிற்பாடு ஒளி பட்ட மலை போல மின்னும்
அப்பிஞ்சு முகத்தின் கன்னக் கதப்பு
மனக் கண்ணில் மறையாது
எண்ண எண்ண சலிக்காது 
வந்து நின்று போகாது
மனைவிமகன் மேலிருந்த தேடல் மெல்ல
மகளின் மேல் நகரும் காலம்
தொலைதூரம்   இருந்தாலும்  தொடர்ந்தேதான்  ஆகும்
கொடுத்து வந்த முத்தத்தின் 
மணம் இன்னும் மாறவில்லை
கையசைத்து ,காலசைத்து மெல்லியப் புன்னகையை
எனை நோக்கி வீசியதை மனமுழுக்க சேமித்து
யோசித்து செலவிட்டு கழிக்க வேண்டும் சில நாட்கள்
சேமிப்பு தீருமுன்பு மீண்டுமங்கு போகவேண்டும் 
பல முத்தங்கள் வாங்கவேண்டும் 
 
 
 
தொடர்பறுதல்

                                          
ஏகாந்த இரவொன்றில் வான்பார்த்து
மாடியில் படுத்தபோது தென்பட்ட
நட்சத்திரங்கள் ஒவ்வொன்றின் இடையேயும்
விரிந்துக் கிடக்கிறது 
ஏகப்பட்டத் தொலைவு
எனை விட்டுத்
தொடர்பறுந்துப் போனவர்கள் போல   
ஒன்றாய்ப் படித்து, சுற்றிய நண்பர்கள் 
நெருக்கமாய்ப் பழகிய
தொடர் கடிதத் தோழிகள்
பக்கத்து வீடுகளில் குடியிருந்துப் போனவர்கள்
நெருக்கமாய் இருந்த தூரத்து உறவுகள் 
இலக்கியம் பேசி 
உணர்ச்சி வசப் பட்டவர்கள் 
பலருடனும் இற்றறுந்துப் போயிற்று தொடர்பு
முகநூலிலும், ஆர்குட்டிலும் தேடித் தேடி 
அலுத்தப் பின்பும் அழிபடாமல்
மனதுள் விரிகிறது அவர்களுடனான
எனது நாட்கள் 
புதிது புதிதாய்க் கிடைக்கும் 
தொடர்புகளும்
சிறிது நாளில் தொடர்பறுகிறது
கைபேசி அழைப்புகளும் பயனற்று போனபின்பு 
எண்களை அழித்துவிட்டு 
எதிர் நோக்கிக் காத்திருக்க
ஒன்று மட்டும் புரிகிறது 
தொடர்பறுதல் தொடர்ந்துகொண்டேயிருக்கும்    
என் தொடர்பு 
புவியறுக்கும் காலம் வரை
 
 
நிகழ்வு

நீ போன பிற்பாடு
அவ்வீட்டில் இருப்பதற்கு
பொறுக்காதென்மனம்
ஒரு கணம் கூட
அதீத அமைதியும்
இறப்பினையொத்த சூழலும்
துக்கமாய் விழித்தெழும்
தூக்க மூஞ்சிகளும்
குமட்டும் கொடூரமாய்
நீண்டு விழும் என்னுள்
எங்காவது நடக்க வேண்டும்
அல்லது 
உன்னுள் கரைந்தபடி கிடக்க வேண்டும்
எங்கெங்கோ செல்லும் மனம்
எங்கெல்லாம்?
 
 
நினைவுகள் 
                         
திடீரென்று சம்மந்தமே இல்லாப் பொழுதொன்றில் உன் நினைவுகள் எழுந்து விரிகிறது மனதில் இப்பொழுது நீ எங்கிருக்கிறாய்... எப்படி இருக்கிறாய் எதுவுமேத்  தெரியாத போதிலும் .. கற்பனையில் துல்லியமாய்த் தெரிகிறாய் அதே சிரிப்பு.. நிஜத்தில் ஒரு வேளைமாறியிருக்கலாம் ஆனால் என் மனதுள் அப்படியே                                                                                                                                         
இருபதாண்டுகளுக்கு முன்பிருந்த உன் முகமும்பேச்சும்சிரிப்பும்
சற்றும் மாறாமல்ப் பளீரிடுகிறது   ...
 
கல்லூரி வளாகத்தில் முந்திரி மரத்தில்ச் சாய்ந்து
என் விரல்களைக் கோர்த்தபடி நீ சொன்ன வார்த்தைகள் இத்தனை
ஆண்டுகளுக்குப் பிற்பாடு ஏன் இன்றென்னை வந்தடைகிறது மீண்டும்விரக்தி நேர்கையில் சுகங்களாய்க் கழிந்த பொழுதுகளை மீண்டும் மீட்டெடுக்கத் துடிக்கிறதோ மனம் ? எங்கிருந்தாலும் என்னைப்போல் உனக்கும் என்றாவதுத் தோன்றுமோ நாம் தவறவிட்ட வாழ்வின் சுகமானப் பொழுதுகளை நினைக்க?
 
பிச்சைக் காரர்கள் 
                                  
வயோதிகக் கூனால் வளைந்த நடையுடன் 
பஞ்சடைத்தக் கண்களும் நடுங்கும் உடலுமாய் ... 
கந்தல் உடையுடன் கையேந்தி நின்ற 
அந்தப் பிச்சைக் காரனுக்கு
 தேனீர் வாங்கித் தந்து 
கையில் பத்து ரூபாய்க்கொடுத்தபோது ... 
நெஞ்சம் முழுக்க ஏதோ நிறைந்தது...
மின் விசிறியின் கீழே , சுழல் நாற்காலியில்
அமர்தபடி மூன்று  முக இணைப்பிற்காய் ரூபாய்
ஐயாயிரம்  லஞ்சமாய்  வாங்கிய அந்த மின் வாரியப்
பிச்சைக் காரனுக்கு... நானிட்டப் பிச்சையும்
முழுக் குப்பி  விஸ்கியும்  எத்தனை நினைத்தும்
கனக்கிறது மனதுள் அழியாமலேயே....
 

புராதனத் தொடர்ச்சி

புராதனச் சம்பவங்கள் புத்தியில்
படிமமேறி
  நிகழ் வாழ்வில் நெளிந்து
உட்ப்புகவும்,
  வெளி வரவும் முடியாது
உறக்கமற்ற
 சூனியத்தை
ஒளிப் பிழம்புகளாய் சுருட்டியள்ள 
நிலை குலைந்து 
புராதனமனைத்தும்
துடைத்தெறியும்
 வெறியில் 
புதியன பலவும் படித்தறிந்து 
புகுத்தி வைக்க எத்தனிக்கும் மனதில் 
புதியன எதுவும்
புராதனத்துடனே ஒப்பிட்டு நிற்கும்
தன்னுள்ப் புலம்பும் மனம்
'
 புதியனவென்று எதுவும் இல்லை 
எல்லாம்,எல்லாம் புராதனத்தின் தொடரே'
 
( 25-09-2011  திண்ணை இணையழ்   )
 
புரியாமல் நிகழும் பகை

எனக்கொன்றும் பகையில்லை
யாரோடும் என்றாலும்
எல்லோர்க்கும் என்மீது
ஏனிதென்று புரியாமல்
என்னோடே நிகழ்ந்துவிடுகிறது
பல சமயங்களில் என்பகை
அன்போடு பழகவரும்
சிலர்கூட
சுயபகையோடு கொடூரமுறும்
என்முகத்தை
பகைத்துதறிச் சென்றபின்
உள்ளிருந்து கிளம்பும்
ஏனிப்படியென்று
என்னோடு பகைகொண்ட
என் கேள்வி.
 
 
பூனைகளின் மரணம் 
                                           
யாரேனும் கண்டதுண்டோ
பூனைகளின் இயற்கையான மரணத்தை
வாகனங்களில் அடிபட்டோநாய்களால் 
கடிபட்டோ இரை பிடிக்கத் தாவுகையில் 
தவறிக் கிணற்றுள் விழுந்தோ
விபத்து சார்ந்த மரணங்களன்றி 
பூனைகளின் இயற்கையான மரணம் 
மனித மனதைப் போல பெரும் புதிர்!
 
குறிகிய இடத்துள் நெளிந்து நுழையும் 
உயர இடத்தில் பரபரக்க ஏறும்
எப்படித் துக்கிப் போட்டாலும் 
கால்கள் ஊன்றித் தரையிறங்கும் 
புழுதியில்ப் புரண்டு அழுக்காகும் 
நாக்கால் நக்கியே தூய்மையாகும் 
விரட்டி வேட்டயாடி சில நேரங்களில் 
வேடிக்கையாய் விளையாடி
புணர்தல் குரலில் ஆவேசங் காட்டி 
வாழும் பூனைகள்
மரணத்தின்  சூட்சுமத்தை 
மறைத்தே வைத்திருக்கும்
தன் மலக் கழிவைக் கூட
குழி தோண்டிப் புதைக்குமவை
மரணத்தை தம்முள் 
பதுக்கியபடி எங்கென்றே தெரியாமல் 
மறையும் ஒரு நாள்.  
 
பேரின்பம் 

குழந்தை தூங்கும்வரை
மவுனத்தைக் கட்டிக் கிடக்கும்
இருவரின் விரகமும்
ரகசியப் பேச்சும்
மெல்லிய வெளிச்சத்தில்
கண்கள் மின்னி காமம் கொதிக்கும்
தூங்கியக் குழந்தையை
மெல்ல நகர்த்தி
உருளாமல் இருக்க
தலையணை வைத்து
மெதுவாய் வந்து அருகில் அணைக்க
அடடா அதுதான் பேரின்பமே!
 
போதை

கொன்றை மரம் பூப்பூக்கும்
காலத்தில் நிகழும்
விஷு கைநீட்ட காசில்
கடலை மிட்டாய் சாப்பிட்டேன்
அடுத்த வருடத்தில் அதே நாளில்
வில்ஸ் பிடித்தேன்
அதற்கடுத்த வருடத்தில்
கை நீட்டப்பணமும்
சேமித்த உண்டிக் காசுமாய்
மேக்டோவல் வாங்கினேன்
இவ்வருடம்
கண்டிப்பாக
இலக்கிய புத்தகம் தான்.
 
 
மரணித்த வாழ்வு

பிறப்பின் வழி தெரியா
பொழுது
திகைத்த கணங்கள்
நினைவில்லை
 
இறப்பின் வழி தெரிந்த பிறகு 
மரணிக்க மனமின்றி
வாழும் வாழ்வின் 
சுகம் துலைத்து
மரணித்த வாழ்வை
வாழ்வென்று 
வாழும் கணங்கள்  எனக்கின்று.
 
 
 ஒருவித வாழ்வு
 
என் மனச் சிலுவையில்
அவளை பலமாய் அறைந்து
சுமந்து சென்றேன்
எப்படியோ
அசைத்தசைத்து இறங்கிப்
போய்விட்டாள்
இப்பொழுது
வெறும் சிலுவை சுமந்து நான்
பெரும் காயங்களோடு அவள்.
 
 
இயல்பு

சேர்ந்தே தான்  இருக்கிறோம் 
தனித்தனியாக
பிரிந்தே தான் செல்கிறோம் 
சேர்ந்திருந்த பிற்பாடு
பேசிக்கொள்கிறோம் 
பேசாதேவை பற்றி 
இணைக்கத்தான் துடிக்கிறோம் 
இணையாதவை பலவும்   
பேச்சின் வீரியத்தால்
பேசாமல் இருக்கிறோம்
பல நாட்கள் 
வார்த்தை வதைத்ததால் வாடிய 
இதயம்  மீண்டும் சேரவே 
என்றும் துடிக்கும்
சேர்ந்தபின் மீண்டும் 
பிரியவேத் தவிக்கும்.
 
 
மன இறுக்கம்

எனக்கும் அவளுக்குமான
இடைவெளி இறுக்கத்தில்
பிரபஞ்சம் சுருங்கி
எண்ணற்ற வண்ணங்களுடன்
உருவற்ற துகள்கள் மிதக்க
நிசப்த சூழலில்
காதுக்குள் சப்திக்கும் தொலைதூர
சில்வண்டுகள்
 
ஈன ஸ்வரத்தில்
முகர்ந்த மலர் மணமெல்லாம்
ஒவ்வொன்றாய் வந்துபோய்
நிலைகுத்தும்
தோலோடெங்கும் ஈரம் பூத்து
மயிர்ச் செடிகள் நேர்கொள்ளும்
பூமி பிளந்து பெரு ஊற்றுப்
பீறிட்டு சதுப்பாகும் வெண்மணலிடம்.
 
 
மனபோதை 
 
போதையென்பது வஸ்துக்களிலல்ல 
அது, மனம் சார்ந்த நிலமைகளின்
வலிமைகளைப் பின்பற்றி 
மூளையைக் கிறக்குவது
மனச் சோர்வின் போது 
ஒரு மிடறு போதும்
தலைகேறித் தாவும் 
மகிழ்ச்சியின் உச்சத்தில் கோப்பைகள் பல 
உள்ளிறங்கிப் போனாலும் 
தாளம் தப்பித் தள்ளாடது
உதடுக்கும்
மதுக் கோப்பைக்குமிடையே   
மெல்லிய நூலிழையால்
இணைந்து கிடக்கிறது 
போதைக் காற்றாடி
இருப்பதா பறப்பதாவென்பது 
மனக் காற்றின் வேகத்தைப் பொறுத்தது.

மெய்க் கீர்த்தி 
 
மரங்கள் கூட அசையாத 

வன்னிருட்டில் அவன் நடக்கநடக்க 

இருள் பழகி பாதை தெரிந்தது.

விடியலின் போதவன் போகும்

 ஊர் போய் சேர்ந்திருந்தான்.

வரையவே வராது என்றிருந்தவன் 
முயன்று பார்ப்போமே என 
வரைந்த ஓவியங்கள் 
பெருந்தொகைக்கு விலை போயின
முயன்று பார்க்கலாமென அவன் 
முழு மூச்சாய் முயன்றவை முழுவதையும்
வென்றெடுத்தான்
போதுமென்ற நிறைவோடு
ஓய்ந்திருக்க 
எண்ணியவன்
ஒதுங்கி இருக்கையிலே 
மரணம் அவனை ஆரத் தழுவியது.

ராசிப் பிரசவங்கள்  
                           
நாள் கிழமைப் பார்த்து                                                                             
டாக்டருக்குச் சொல்லிவிட்டால்
கோள் ராசி பயமில்லை
டாக்டரின் கத்திக்குள் 
நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கும்
மிகச் சிறந்த ராசியதில்,
 சுத்த நட்சத்திரத்தில்
அற்புதமான நாளன்று 
 அறுவை முறை கலையோடு
அக் குழந்தை அவதரிக்கும்
குழந்தை பிறக்கும் நேரம் 
இயற்கையின் கை விட்டு                    
கத்திக்கும்காசுக்கும்  கைமாறி
காலங்கள் ஆகிப் போச்சு
என்  குழந்தை பிறந்த நாள்
இதென்று சொல்லாமல்
பிறப்பித்த நாள் இதுவென்று 
சொல்லவேண்டும்
டாக்டர்கள் இனிமேல்
பஞ்சாங்கமும் பயில வேண்டும்
சோதிடமும் தெரிய  வேண்டும்
ராகுகேதுகுரு பெயர்ச்சித் 
தவறாமல் சொல்ல வேண்டும்
நல்ல நாள் பார்த்து,
அறுத்தெடுத்து அத்தனை
சேய்களையும் நாடாளச் செய்ய வேண்டும் 

வார்த்தை

அச்சுறுத்தும் கண்களோடு
உனைநான் பார்த்திருக்கலாம்
எனக்குள்ளே ரூபங்கொண்ட
குரலால் அன்பின் பேருருவை
உனக்கு காட்டாமல்ப்
போயிருக்கலாம்.
அருகில் வந்து பேசியபோது
மெக்டோவலும்சிகரெட் நாற்றமும்
உனை தாக்கியிருக்கலாம்
இவையாவும் புறந்தள்ளி
நெக்குருகி நீ சொன்ன
வார்த்தைக்குப் பிற்பாடு
குழந்தையாகிக் கொண்டிருக்கிறது
ஒரு இளைஞனின் இதயம்.
 
 
விரிசலுக்குப் பிற்பாடும் 
 
உனக்கும் எனக்குமான நட்பில் 
விழுந்த விரிசல் - உன்
ஒரு சொல்லால் விளைந்தது 
பிற்பாடு
நீ கேட்ட மன்னிப்புகள் அத்தனையும்
உன்னையே நிலை நிறுத்தி    
என்மீதுக் கவிழ்ந்ததாய் இருக்க 
விரிசல் விரிவடைந்து  
நீயோநானோ பரஸ்பரம் 
பார்ப்பதைத் தவிர்த்தும் 
எதேச்சையாய் உன்னை எங்காவதுக்
காணும் போதினில் இதயம் சுற்றி 
வலையொன்று இறுக்கும்.
 
கண்கள் தானாய் வேறிடம் நோக்கி 
கால்கள் அதுவாய்த் திரும்பி நடக்கும்
மனதுள் மட்டும் ஏக்கம் புரண்டு 
நீ அழைக்கும் குரல் கேட்க 
காதுகள் விடைத்துக் கூர்மையாகும் 
உனக்கும் வாய்வரை வார்த்தைகள் வரலாம் 
அடக்கிக் கொள்கிறாய் என்னைப் போலவே 
எது எப்படியாயினும் உன்னைப் பற்றி 
தவறாய் எவரேனும் சொல்லும் போது
என்னையும் அறியாக்  கோபம் வரும்  
இன்னமும் உள்ளே 
எங்கோக் கிடக்கிறது உனக்கான 
என் நட்பின் உதிரித் துளிகள்.
 
 
விளைவு

இரவிலும்

கனவோடு புலரும்

 பொற்காலை பொழுதிலும்

போர்த்தித் தூங்கிய கம்பளம்

சொல்லலாம்

கண்டக் கனவின்

அர்த்தங்களும்

பயமுண்ட நேர அபத்தங்களும்.
 
 
புரிதல்

எழுத்துகளைப் பற்றி

அறியா நாளில்

எழுத்தென்று எங்கெங்கோ

விழுந்து சிதறிய காலம்

என்றொரு நாளோ எழுந்த பிரம்மை

எது எழுத்தென்ற கேள்வி

சிதறும் நேரம் 

நான் எதுவும் படித்ததில்லை.
 
எது?

நான் சிதறினேன்

குளத்து அலைகளில்

என் உந்தலில்

நானாக நானிருந்த போது

குளம் அமைதியானது.
 
 
இதுவும்

நான் என்னையிழந்த

ஒரு பெருவழியுண்டு

ஒயின் ஷாப்பாக இருக்கலாம்

அல்லது

வேறொன்று

வருமானமற்ற வயிற்றில்

உரசும் போதை

தன்மானம் தளர்ந்து

மனைவி குழந்தை.
 
 
  என் நிலை
                         - பத்மநாபபுரம் அரவிந்தன் -
 
உங்களின் சமூகக் கட்டமைப்புள்

நான் கட்டுப்படவில்லை

என்ற கோபம் உங்களுக்கு..

கட்டமைப்புள் கட்டுப்படாத

பெருமை எனக்கு...

நீங்கள் சரியென நினைப்பவை

அனைத்தும்

அபத்த ரூபத்திலழுத்தும் என்னை...

என் வழியில் நீங்கள்

கடந்து போகலாம் ஆனால்

என்னை
தள்ளிவிட்டுப் போகவோ

அல்லது இழுத்துப் போகவோ
 
நான் சம்மதிக்கவே மாட்டேன் 

உங்களிடம் இருப்பதோ..

என்னிடம் இல்லாததோ

எதுவாயினும்

உங்கள் வழி வந்து

கேட்பதற்குப் பதிலாய்,

என்னிடமிருப்பதைக் கொண்டு  

நான் பேரானந்தமடைவேன்

உங்கள் கூண்டுக்குள்

நீங்கள் சுழலுங்கள்,
எந்தன் வெளியில்

நான் பறக்கிறேன்

கீழ் நின்று மேல் நோக்கி

என்னைப் பார்க்கலாம்

உங்களால் இயன்றளவு

கற்களை, சொற்களை வீசலாம்..

கை, வாய் சோர்ந்து நீங்கள்

ஓய்ந்திருக்கும் நேரம்

ஏதாவதொரு மரத்திலமர்ந்து

மேலிருந்துங்களை

கீழ் நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பேன்
 


ஏன் இப்படி?
                           - பத்மநாபபுரம் அரவிந்தன் -

என் எண்ணச் சிறகுகள்

விரிந்தெழும் நேரத்தில்

எப்படிக் கிடைக்கிறது

 உனக்கு

அவற்றை சுட்டுப் பொசுக்கும்

வீரிய வார்த்தைகள் ?

கற்பனைப் பெரிகிவரும் நேரம்

நசுக்கப் படுகிறதென்மனது எப்பொழுதும் 

உன் பேச்சாலும், செயலாலும்.


மகிழ்ச்சியாய் இருக்கும் மனதை

நேரெதிராய்ப் புரட்டிப் போடும் 

சூட்சும சூத்திரங்கள் 

எங்கு நீ கற்றுக் கொண்டாயோ தெரியவில்லை


ஏன் உனக்கு நான் சந்தோஷமாய் இருக்கும் 

சந்தர்ப்பங்களை சகித்துக் கொள்ள முடியவில்லை?

உன்னால் என்னுள் நான் 

சுருங்கிக் கொள்கிறேன்


சிலர் கேட்கிறார்கள் 

ஏன் இப்படியென்று?

எப்படி நான் சொல்வது

 எல்லாம் அப்படித்தானென்று..
 



பொறுமையின் வளைகொம்பு

                                                           - பத்மநாபபுரம் அரவிந்தன் -



பொறுமைக் கொம்பின் நுனிவரையேறி

வளைத்துப் பிடித்து வைத்திருக்கிறேன்

விட்டுவிடுவேனோ என்ற 

பெரும் பயத்தில் மனது 

துடிக்கிறது படபடத்து 

விட்டுவிட்டேனென்றால் 

வளைந்த கொம்பு 

முழு வீரியத்துடன் எம்பி நிமிரும் 

அதன் தாக்கம் சாமன்யமாய் இருக்காது.. 

விடக் கூடாதென்ற வைராக்கியம் 

வளைத்துப் பிடித்தபடியே இருக்கிறது

அழுத்திப் பிடித்திருப்பதால்

 தசைகள் வலிக்கிறது.. ரத்தமும் கசிகிறது

கை ரத்தக் கசிவால் 

ஒருவேளை விட்டுவிட நேரலாம்..

 கூடாதென்ற பிடிவாதத்தில் 

தொங்குகிறது மனம்

ஆனால் விடாமல் இருந்தால்

 மீண்டும் மீண்டும் நான் 

ரணப்பட வேண்டி வரலாம்

முடியும்வரை பிடித்திருப்பேன்

முடியாதெனும் நிலையில்

விட்டுவிட்டு  எங்கேனும் போவேனொருநாள்

கைகள் துடைத்து

சேதங்கள் பற்றிய கவலையற்று..